அரசு பஸ் டிரைவரை தாக்கிய இரண்டு நபர்கள் கைது

சென்னையில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய இரண்டுபேரை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை, நம்மாழ்வார்பேட்டை, சுப்பராயன் மெயின்தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 48). சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் தடம் எண். 102 எம் பேருந்தில் ஓட்டுநர் பணியிலிருந்தார். அப்போது பேருந்து பிராட்வேயிலிருந்து கண்ணகி நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. வழியில் காமராஜர் சாலை, அன்னை சத்தியா நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு நபர்கள் அதிவேகமாக பேருந்தை முந்திக்கொண்டு அபாயகரமாக சென்றனர். உடனே பேருந்து ஓட்டுநர் சுந்தரமூர்த்தி சத்தம்போடவே, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், பேருந்திற்கு முன்பு இருசக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு வீண்தகராறு செய்துள்ளனர். உடனே பேருந்து ஓட்டுநர் சுந்தரமூர்த்தி பேருந்து செல்வதற்கு வழிவிடுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேற்படி இருவரும் ஓட்டுநர் சுந்தரமூர்த்தியை கையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் சுந்தரமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக சுந்தரமூர்த்தி கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தியை தாக்கிய அன்னை சத்தியநகரைச் சேர்ந்த மணிகண்டன் (எ) கர்கா மணிகண்டன் (20). ஆனந்த குமார் (20) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!