அரசு மருத்துவமனை முன்பாக அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் எச்சரித்துள்ளார்.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கானாவிலக்கு உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் முன்பாக பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஆட்களை ஏற்றிச் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையின் வாயில் முன்பாக நடந்த விபத்தில் பெயிண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்,விபத்து பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
ஆய்வின்போது, மருத்துவமனை வாயில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை உரிய இடத்தில் நிறுத்த அறிவுறுத்திய அவர், தொடர்ந்து, மருத்துவமனை முன்பாக நிறுத்தப்படும் வாகனங்களை சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கண்டறிந்து, அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், மருத்துவமனை முன்பாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை வருவாய் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் குழுவினை கொண்டு ஆய்வுசெய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இந்த ஆய்வின்போது, தேனி அரசு மருத்துவமனை முதல்வர் இளங்கோவன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.