ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தப்பட்ட 510 கிலோ கஞ்சாவை போலீசார் மடக்கிப் பிடித்து 2 பேரை கைது செய்தனர். தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.
சென்னை ரெட்ஹில்ஸ், மொண்டியம்மன் நகர் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டேங்கர் லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். லாரியில் இருந்த 2 நபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
சந்தேகத்தின்பேரில், டேங்கர் லாரியை சோதனை செய்தபோது அதில் பெருமளவு கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. தார்லோடு ஏற்றிச் செல்வதன் பெயரில் டேங்கர் லாரியில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து டேங்கர் லாரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 510 கிலோ கஞ்சா மற்றும் டேங்கர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர். பிடிபட்ட கஞ்சாவை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கஞ்சா லாரியை மடக்கிப் பிடித்த கூடுதல் கமிஷனர் அருண், வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன், மாதவரம் துணைக்கமிஷனர் கே பாலகிருஷ்ணன் மேற்பார்வையிலான ரெட்ஹில்ஸ் போலீசாரை கமிஷனர் வெகுவாக பாராட்டினார்.