சென்னை,
ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு சைபர்கிரைம் காவல் நிலையங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 22 லட்சத்து 81 ஆயிரத்து 682 ரூபாய் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மட்டுமே இத்தனை நாள் இயங்கி வந்தது. விஜயகுமார் கமிஷனராக இருந்த போது இந்த சைபர்கிரைம் போலீஸ் பிரிவு கடந்த 2003ம் ஆண்டு துவங்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர்களில் நடக்கும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அனைத்தும் இங்கு விசாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க பொதுமக்கள் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகம் வரை நீண்ட துாரம் வரவேண்டிய சூழல் ஏற்பட்டதால் அது அவர்களுக்கு பெரும் சிரமமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதனால் சென்னை நகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் உள்ள துணைக்கமிஷனர் அலுவலகத்தில் புதிய சைபர்கிரைம் காவல் நிலையங்கள் தொடங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன் பேரில் கடந்த மாதம் சென்னை நகரில் 12 சைபர்கிரைம் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அதனை கடந்த மாதம் தொடங்கி வைத்தார். அந்தந்த போலீஸ் நிலைய எல்லையில் உள்ள பொதுமக்கள் அங்குள்ள துணைக்கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் அளிக்க ஏதுவாகி வருகிறது.
அது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘இணைதளம் மற்றும் மொபைல் சேவைகள், ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் மூலம் இணைய குற்றங்கள் நடைபெறுவதில் ஓடிபி மோசடி என பல்வேறு மோசடிகள் தொடர்பாக சைபர்கிரைம் போலீசில் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சைபர்கிரைம்கள் தொடர்பாக இதுவரை வடக்கு மண்டலத்தில் 57 வழக்குகள், தெற்கு மண்டலத்தில் 292 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 115 வழக்குகள், மேற்கு மண்டலத்தில் 138 வழக்குகள் என மொத்தம் 602 புகார்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 57 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 250 புகார்கள் விசாரணை முடிந்து தீர்வு காணும் நிலையில் உள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பொதுமக்கள் இழந்த ரூ. 22 லட்சத்து 81 ஆயிரத்து 682 மீட்கப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் திரும்ப செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமரன் நகர் காவல் நிலைய எல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அடையார் பகுதியில் கடந்த மாதம் 11ம் தேதியன்று பிரான்சிஸ் அந்தோணி பினுகர் என்பவரின் ஏடிஎம் கார்டின் மூலம் ரூ.46 ஆயிரத்து 850 ரூபாய் மோசடி செய்யப்பட்டது. அதன் மீது அடையாறு சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுக்கொடுத்தனர். அதே போல சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில் வசிக்கும் பிரசன்னகுமார் என்பவர் இந்த ரூ. 69,980 மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.