சட்டசபையில் கவர்னரின் உரை, முன்னோடி திட்டங்கள் இல்லாமல் ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
கவர்னர் உரை குறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* கவர்னர் உரையில் எப்போதுமே அரசின் முன்னோடி திட்டங்கள் இடம்பெறும். ஆனால் இன்றைய கவர்னர் உரையில் அப்படிப்பட்ட முன்னோடி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
* திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் அறிவித்தார்கள். அப்போது அறிவித்துவிட்டு, அதற்கு மாறாக இப்போது கமிட்டியை அமைத்துள்ளனர்.
* ரத்து செய்யப்படும் என கூறிவிட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் இன்னும் நீட் தேர்வு முடிவுக்கு வரவில்லை, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு குறிப்பிட்டுள்ளார்.
* விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறி நடைமுறைப்படுத்தினோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை.
* கல்விக்கடன், நகைக்கடன் உள்ளிட்டவைகள் குறித்தும் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை.
* அதேபோல், பெட்ரோல், டீசல் விலைக் குறைக்கப்படும் என அறிவித்தார்கள், குடும்பத் தலைவிக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும், கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் இப்படி பல திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், கவர்னரின் உரையில் இது குறித்து எதுவும் இடம்பெறவில்லை.
* கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது. அதிமுக ஆட்சியில் அதிகபட்சமாக 7 ஆயிரமாக தான் தினசரி பாதிப்பு இருந்தது, ஆனால், திமுக ஆட்சியில் பல மடங்கு அதிகரித்தது. ஆர்டி–பிசிஆர் பரிசோதனையில் மிகப்பெரிய குளறுபடி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.