ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்….ரபெல் நடால் கால்இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 17-ம் நிலை வீரரான இத்தாலியின் பாபியோ போக்னினியை எதிர்கொண்டார்.

2 மணி 16 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் போக்னினியை விரட்டியடித்து 13-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாஸ்சை சந்திக்க இருந்த 10-ம் நிலை வீரரான இத்தாலியின் பெரேட்டினி முந்தைய சுற்று ஆட்டத்தின் போது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் குணமடையாததால் போட்டியில் இருந்து விலகினார்.

இதனால் சிட்சிபாஸ் 4-வது சுற்றில் ஆடாமலேயே 2-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் ரபெல் நடால்சிட்சிபாஸ் மோதுகிறார்கள். தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-4, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் மெக்டொனால்டை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் கால் பதித்தார்.

மெட்விடேவ் தொடர்ச்சியாக பெற்ற 18-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 29 நிமிடம் தேவைப்பட்டது. இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-2, 7-6 (7-3) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் போது அவரை எதிர்த்து ஆடிய 28-ம் நிலை வீரரான காஸ்பெர் ரூட் (நார்வே) வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து பாதியில் விலகினார்.

இதனால் ஆந்த்ரே ரூப்லெவ் வெற்றி பெற்று முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் மெட்விடேவ்ஆந்த்ரே ரூப்லெவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 57-ம் நிலை வீராங்கனையான செல்பி ரோஜர்சை (அமெரிக்கா) விரட்டியடித்து தொடர்ந்து 3-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முசோவா 7-6 (7-5), 7-5 என்ற நேர்செட்டில் 16-வது இடத்தில் உள்ள எலிசி மெர்டென்சுக்கு (பெல்ஜியம்) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கால்இறுதியில் கரோலினா முசோவா, ஆஷ்லி பார்ட்டியை எதிர்கொள்கிறார்.

இதேபோல் 61-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 6-1, 7-5 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் டோனா வெகிச்சை வெளியேற்றி முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி கண்டார். கால்இறுதியில் ஜெனிபர் பிராடிஜெசிகா பெகுலா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

Translate »
error: Content is protected !!