இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தியது.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தியது. மும்பை அணியில் முர்தடா பால் 9-வது நிமிடத்திலும், பிபின்சிங் 15-வது நிமிடத்திலும், ஒபிசே 84-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
9-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 7-வது வெற்றியை பெற்றதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்–கோவா அணிகள் சந்திக்கின்றன.