இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்சின், 2021ம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக, பாரத் பையோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு இந்தியா உட்பட உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
சவாலான இந்த பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில், இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனமும் ஒன்று. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கோவேக்சின் உருவாக்கப்பட்டு வருகிறது.
கோவேக்சின் தடுப்பு மருந்துக்கான 3ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனை நடைமுறைகள், கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருவதாக, பாரத் பையோடெக் நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு செயல் தலைவர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தடுப்பு மருந்துகள் கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் 50 சதவீதம் பூர்த்தி செய்து விட்டாலே அவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவை ஒப்புதல் வழங்குகின்றன.
கோவேக்சின் தடுப்பு மருந்து குறைந்தது 60 சதவீதம் வெற்றிகரமானதாக இருக்கும். அதற்கு கூடுதலாகவும் சிறப்புடன் செயல்பட முடியும் என்று நம்புகிறோம். கோவேக்சின் தடுப்பு மருந்து வரும் 2021ஆம் ஆண்டின் 2ம் காலாண்டில் வெளியிட இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று சாய் பிரசாத் தெரிவித்தார்.