சென்னை,
சசிகலாவின் பேச்சு மறுபடியும் தமிழக அரசியலில் ஆரம்பமாகி உள்ளதை அடுத்து, சில தர்மசங்கடங்களும், சமாளிப்பு சூழலும் அதிமுக சூழ்ந்து கொண்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் இருந்த நிலை வேறு. தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுக அரசின் நிலை வேறு என்றுதான் பார்க்க வேண்டி உள்ளது. இதற்கு காரணம், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுதான்.
என்னதான் 20 சதவீதத்தில் இருந்து பாதிக்கு பாதி 10 சதவீதத்தை எடுத்து வன்னியர்களுக்கு ஒதுக்கினாலும், அத்தனை வன்னியர்களும் அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போடப்போவதில்லை என்பதே யதார்த்தம்.
இயல்பாகவே அவர்கள் திமுக, அல்லது தேமுதிக தீவிர ஆதரவாளர்களாக இருந்தால், இந்த இடஒதுக்கீடு பயனளிக்க போவதில்லை. எனவே, போராடி பெற்ற இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் அதிமுக பாமக கூட்டணிக்கு முழு பலன் கிட்டாது என்பதை அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால், மற்ற சமுதாயத்தினரின் அதிருப்தியையும் அதிமுக சம்பாதித்து வருகிறது. குறிப்பாக தென்மண்டலங்களில் இந்த எதிர்ப்பு நிறைய உள்ளது. ஏற்கனவே சசிகலாவின் செல்வாக்கு நிறைந்து கிடக்கும் தென்மண்டங்களில், இந்த அதிருப்தியும் சேர்ந்து கொண்டால், அது அதிமுகவுக்கே பெரும் சறுக்கலாக போய்விடும் என்பதை ஓபிஎஸ் நன்றாக உணர்ந்துள்ளார். அதிலும் தன் தொகுதியிலேயே நிலைமை சிக்கல் என்பதையும் நேரடியாக உணர்ந்து வருகிறார்.
அதனாலயே இந்த முறை, முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பெரும்பாலானோருக்கு சீட்டுகளை அள்ளி வழங்கியிருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. ஆனாலும் இது தினகரனின் எழுச்சியால் ஒர்க் அவுட் ஆகுமா என்பது சந்தேகம்தான். எனவேதான், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தாலும், ஓபிஎஸ் சற்று தளர்வு காட்டுகிறார்.
இப்போதைக்கு, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்க்கும் தேவர் சமூகத்தினர், தேவர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களான ஓபிஎஸ், ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் போன்றோருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இதனால், கலங்கி போயுள்ள அவர்கள், இனி சசிகலாவையும் எதிர்த்தால் நிலைமை முதலுக்கே மோசமாகி விடும் என்பதால், எந்த இடத்திலும் சசிகலா பற்றி பேச்சே எடுக்காமல் இருக்கறார்கள்.
இந்த சமூகம் இப்படி என்றால், நாயக்கர் சமூகம் அதற்கு மேல் உள்ளது. அந்த வாக்குகளை குறி வைத்து கோவில்பட்டியில் தினகரன் இறங்க உள்ளார். இதனால் அளவுக்கு அதிகமாக கலக்கத்தில் உள்ளது கடம்பூர் ராஜூதான். அதனால்தான், “ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் வீண் பழி சுமத்தவில்லை. ஜெயலலிதா மரணத்தில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. அதனால்தான் ஜெயலலிதா மறைந்துவிட்டார்” என்று விளக்கம் தந்துள்ளார்.
அதாவது மரணம் குறித்து விசாரிக்க ஒரு ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டது என்ற விஷயத்தையே மறைத்துவிட்டு, இப்படி சம்பந்தமில்லாமல் சொல்லி உள்ளார். இதுவும் சசிகலா மீதான சாஃப்ட் கார்னர்தான் என்கிறார்கள். ஆக மொத்தம், எந்த வகையிலும் சசிகலாவை பகைத்துக் கொள்ள கூடாது என்பதில் அதிமுக தெளிவாக உள்ளதாக தெரிகறது. அதேசமயம், தினகரனையும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளது போல் தெரிகிறது.
சசிகலாவை மறுபடியும் கட்சிக்குள் இணைப்பா, வேண்டாமா என்ற ஒரு பேச்சு இருப்பதாக சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாகவே சசிகலா, தினகரன் மீதான விமர்சனங்களை அதிமுக தலைமை முன்வைக்காமல் உள்ளது.. ஏன் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.