சென்னை,
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக்கிழமையான இன்று ராகுகாலம் முடிந்து நல்ல நேரத்தில்போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபைத்தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக, திமுக கூட்டணிகள் தவிர நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசன் தலைமையில் கூட்டணி, அமமுக தலைமையில் ஒரு கூட்டணி என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. இந்த போட்டியால் சட்டசபைத் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து வேட்பாளர்களை அறிவித்து விட்டது அதிமுக. நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டது. தமிழகம் ,புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. சனி ,ஞாயிறு தவிர மார்ச் 19ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 பேருக்கு பதில் 2 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இரண்டு வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் என்பதால் ராகுகாலம் முடிந்து நல்ல நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி போடி தொகுதி களைகட்டியுள்ளது.
இதனிடையே சேலம் வாழப்பாடியில் முதல்வர் பழனிசாமி இன்று மாலை சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஏற்காடு தொகுதி வேட்பாளர் மாலை 5 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் . முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் இபிஎஸ் வரும் 15ஆம் தேதி திங்கட்கிழமையன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
மார்ச் 15ஆம் தேதி திங்கட்கிழமை வளர்பிறை துவிதியை திதி அன்றைக்கு முகூர்த்த நாள் அந்த நாளில் பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 17 புதன்கிழமை வளர்பிறை சதுர்த்தி நாள், மார்ச் 18 வளர்பிறை பஞ்சமி பங்குனி கிருத்திகை அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ய நல்ல நாள் என்பதால் அதிக அளவில் வேட்பாளர்கள் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. மார்ச் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதியாக இருந்தாலும் அன்றைக்கு கரிநாளாக இருக்கிறது. கடைசி நாளில் பல வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதை தவிர்த்து விட வாய்ப்பு உள்ளது.
மார்ச் 19ஆம் தேதி வேட்புனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும். மார்ச் 20ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் வேட்புமனு திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 22ஆம் தேதி மாலையே தமிழகம், புதுச்சேரி காண இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.