இம்ரான் கான் அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது..! பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆவேசம்..!

இஸ்லாமாபாத்,

ஒரு நாட்டை நடத்துவது, கிரிக்கெட் அணியை நிர்வகிப்பதைப் போன்றதல்ல என்று, முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி பிரதமர் இம்ரான் கானை விமர்சித்துள்ளார்.

இம்ரான் அரசாங்கம் தற்போதைய சூழ்நிலையில் செய்யும் தவறு நாட்டை பெரும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரி கூறி உள்ளார்.

ஒரு நாட்டை நடத்துவதற்கு வேறுபட்ட மனநிலை இருக்க வேண்டும் என்றும், இவர்கள் அதை கொண்டிருக்கவில்லை என்றும் சர்தாரி கூறினார். முன்னாள் ஜனாதிபதி, இம்ரான் கான் அரசாங்கம் தனது அனுபவமின்மை மற்றும் திறமையின்மை காரணமாக, நாட்டை ஒரு பெரிய நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் என்பதால் அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் இது.

தேர்தல்களை நடத்தவும், மக்கள் யார் பின்னால் நிற்கிறார்கள் என்று பார்க்கவும் அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார். பாகிஸ்தான் அரசியலின் எதிர்காலத்திற்கு அடுத்த சில மாதங்கள் மிக முக்கியமானவை என்றும், இப்போதுள்ள அரசாங்கம் தானாகவே வீழ்ச்சியடையும் என்றும் அவர் கணித்துள்ளார்.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக தேர்தல் மோசடி, ஊழல் மற்றும் நாட்டின் அரசியலில் பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதிக்கம் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அரசாங்க எதிர்ப்பு பேரணிகளை தீவிரமாக நடத்தி வருகிறது. அக்டோபர் 16 முதல் பெஷாவர், குஜ்ரான்வாலா, கராச்சி, குவெட்டா, முல்தான் மற்றும் லாகூரில் ஆறு பேரணிகளை இதுவரை பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!