ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
சிட்னியில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட், அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். வேட் 32 பந்துகளில் 58 ரன்களும், ஸ்மித் 46 ரன்களும் சேர்க்கவே, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை குவித்தது. இந்திய அணித் தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுதிய தமிழக வீரர் நடராஜன், 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், சாகல் மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை தந்தது. ராகுல் 22 பந்துகளில் 30 ரன்களை சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தாலும், ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 52 ரன்களைச் சேர்த்தார். அடுத்ததாக வந்த கேப்டன் விராட் கோலி அதிரடி காட்டவே, ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்தது. இதனால், இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்திருந்த கோலி, எதிர்பாராத விதமாக விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
இறுதி கட்டத்தில் 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சாம்ஸ் வீசிய இறுதி ஓவரில் இரண்டு சிக்சர்களைப் பறக்கவிட்ட ஹர்திக் பாண்ட்யா, இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். இதன் மூலம் இருபது ஓவர் தொடரை வென்ற இந்திய அணி, முன்னதாக ஒருநாள் தொடரை இழந்ததற்கு பழி தீர்த்துக் கொண்டது. ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, உண்மையில் தமிழக வீரர் நடராஜனுக்கு தான் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், மற்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிய போதும், நடராஜன் சிறப்பாக வீசியதாகவும் பாராட்டு தெரிவித்தார்.