கார்ப்பரேட் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என நினைக்கும் நிறுவனங்கள், இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியவர்கள் மட்டுமே அலுவலகம் திரும்புவதற்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளனர்
கொரானா 2ம் அலை உலகையே உலுக்கி வரும் நிலையில் டில்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் மற்ற நகரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருந்தாலும் செப்டம்பர் வரை ‘ஒர்க் அட் ஹோம்’ என்பதையே தொடர இந்தியாவில் உள்ள முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.
மிகப்பெரிய நிறுவனங்களான ஐடிசி, மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், பிளிப்கார்ட், நெஸ்லே, டொயோடோ கிர்லோஸ்கர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அமேசான், கோத்ரெஜ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அலுவலகத்தை திறப்பதற்கு இன்னும் ஆர்வம் காண்பிக்கவில்லை. ஜூன் மாதத்தில் பல மாநில அரசுகள் அலுவலகத்தை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தாலும் செப்டம்பர் வரை வீட்டில் இருந்தே பணி செய்ய பல கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
தொற்று விகிதம், தடுப்பூசி செலுத்தப்பட்டதன் அளவு, மூன்றாம் அலை உருவாகுமா இல்லையா என்ற ஆய்வு இவற்றை வைத்தே அலுவலகம் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு அதனை வழங்க மனித வள பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என நினைக்கும் நிறுவனங்கள், இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியவர்கள் மட்டுமே அலுவலகம் திரும்புவதற்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
உலக அளவில் பாதிப்பு குறைந்தாலும் வீட்டில் இருந்து வேலை செய்வதை பல நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. இதற்கு நிறுவனங்களின் செலவுகள் குறைவதும் கூட ஒரு காரணமாக சொல்லலாம். கூகுள் நிறுவனம் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை கொண்டுவந்ததால் கடந்த ஆண்டில் 100 கோடி டாலர் அளவுக்கு மீதமாகி இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அதனால் 20 சதவீத பணியாளர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என்றும் கூகுள் அறிவித்துள்ளது.