‘‘இரவுநேரத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை குறைக்கும் வகையில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை, எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக சாலையில் உள்ள காவலர் மருத்துவமனைக்கு டாடா மற்றும் டிசிஎஸ் அறக்கட்டளையின் சார்பில் ரூ. 1.19 கோடி செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கொரோானா சிகிச்சைக்கு வலுவூட்டக்கூடிய சிறப்பு மருத்துவ உபகரணங்கள் போலீஸ் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டுள்ளன. சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் முன்னிலையில் காவல் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி சித்ராவிடம் டாடா அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘காவல் துறையைச் சேர்ந்த ஆளிநர்கள் ஒரு நாளைக்கு 400ல் இருந்து 500 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர். சென்னை நகர காவல்துறையில் இதுவரை 2,390 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,100 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளனர்.
சென்னை நகர காவல்துறையில் இரவு பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டர்களின் செல்போன் எண்கள் சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. வழக்கமாக பொதுமக்கள் 100 கட்டுப்பாட்டு அறை எண்ணையே தொடர்பு கொண்டு தெரிவிப்பார்கள். தற்போது பொதுமக்களுக்கு உடனே உதவி கிடைக்கும் வகையிலும் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் இரவு நேர குற்றங்களை குறைக்கும் வகையிலும் இன்ஸ்பெக்டர்களின் செல்போன் எண்களை வெளியிட்டுள்ளோம்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் சின்ன பிரச்சினை என்றாலும் உடனே இன்ஸ்பெக்டர்களை தொடர்பு கொள்ளலாம். சமூக விரோத செயல்கள் குறித்து புகார் அளிப்பவர்கள் பற்றிய தகவல்கள்கள் ரகசியமாக வைக்கப்படும். தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கையை தீவிரப்படுத்த போக்குவரத்துப் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வைத்து தான் போக்குவரத்து போலீசார் சோதனைகளை செய்து வருகின்றனர். மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து குடித்து விட்டு வாகனம் ஓட்டி வருபவர்களை நவீன முறையில் கண்டறிய என்னென்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம்” என்று மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.