இறந்துபோன 18 வங்கி வாடிக்கையாளர்களுக்கு vமோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி மேலாளர் மற்றும் அவரது கூட்டாளியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி இந்தியன் வங்கிக் கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தவர் வினோத் (வயது 33). இவரது கூட்டாளி எண்ணுாரைச் சேர்ந்த நடராஜ் (35). வினோத் எருக்கஞ்சேரி இந்தியன் வங்கி கிளையில் பணிபுரிந்த போது அந்த கிளையில் இறந்துபோன வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு நீண்ட நாட்களாக செயலில் இல்லாததை அறிந்து, அக்கணக்குகளை செயலில் கொண்டு வந்து, அந்த கணக்குகளிலிருந்து நடராஜ் கணக்கிற்கு பணப்பறிமாற்றம் செய்துள்ளனர். சில இறந்து போன வாடிக்கையாளர்களுக்கு புதிதாக ஏடிஎம் கார்டு வழங்கியுள்ளனர். அதனை உபயோகித்து வாடிக்கையளர்களின் கணக்கிலிருந்து மொத்தம் ரூ. 47 லட்சத்து 60 ஆயிரத்து 900- கையாடல் செய்து உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக எருக்கஞ்சேரி இந்தியன் வங்கிக்கிளையின் மேலாளர் ராஜேந்திர பாபு சென்னை போலீஸ் கமிஷனர் அவலகத்தில் புகார் அளித்தார்.
கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் வங்கி மோசடித் தடுப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் விசாரணை நடத்தினர். இதில் வினோத் மோசடியில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வினோத் மற்றும் அவரது கூட்டாளி நடராஜ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள இறந்து போன நபர்களின் மீதுள்ள வங்கி கணக்குகளில் கவனம் செலுத்தி பாதுகாப்புடன் இருக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் தேன்மொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.