மருத்துவ சேவைக்கான இலவச ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முயற்சிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் தந்திரத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
இத்தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், முந்தைய பாதிப்புகளிலிருந்து பாடம் கற்காமலும், மத்திய அரசின் முறையான திட்டமிடல் இல்லாததாலும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பு மருந்துகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவை காரணமாக நாள்தோறும் பாதிப்புகள், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அனைத்து வகையான வசதிகள் இருந்தும் இந்த தட்டுப்பாடுகளுக்கு முக்கிய காரணம் மத்திய அரசின் அலட்சியமே மிகமுக்கிய காரணமாகும்.
இந்நிலையில் இந்த தட்டுப்பாடு என்கிற செய்தியை அடிப்படையாகக் கொண்டு, தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து அதை இலவசமாக வழங்க ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சேவை என்ற பெயரில் மிக தந்திரமாக ஆலையை எப்படியேனும் திறந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மனுவை ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசும் ”நாட்டில் ஆக்சிஜனுக்கு மிக அவசர, அவசிய தேவை இருக்கிறது. அதனால், சுகாதாரப் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தயாரிக்க மட்டும் அனுமதி வழங்கலாம்” என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் எவ்வித ஊடக அறிவிப்பும் இல்லாமல் திடிரென ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தியுள்ளது. அந்த கூட்டத்திற்கு அனைவரையும் அனுமதிக்காத சூழலில் மக்களின் போராட்டத்திற்கு பின்னரே குறிப்பிட்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினர் ஸ்டெர்லைட் ஆலையை ஆலை நிர்வாகமோ அல்லது தமிழக அரசு மூலமோ இயக்க எக்காரணம் கொண்டு அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். மனித உயிருக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கே பெரும் ஆபத்தை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் உள்பட அனைவரின் கோரிக்கையாகும்.
தூத்துக்குடி மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பல உயிர்களை தியாகம் செய்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முயற்சிக்கு வழிகோலினால், அது மனித உரிமைக்கு எதிரான செயல் மட்டுமல்ல, உலகமே வலியுறுத்தி வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எதிரான செயலாகவே அமையும். மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமானால், அது மீண்டும் மிகப்பெரும் மக்கள் போராட்டத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை தமிழக அரசு உணர்ந்து, உச்சநீதிமன்ற விசாரணையின் போது, மக்களின் பக்கம் நின்று ஆலையை எந்த வகையிலும் திறக்க அனுமதிக்காத வகையில் தமிழகத்தின் வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.