உண்மையில் என்ன நடந்தது தெரியுமா? முத்தையா முரளிதரன் ‘பரபர’ அறிக்கை!

என்னை, ஈழத்தமிழர்களுக்கு எதிரானவன் போல் சித்தரிக்க முயல்வது வேதனை அளிக்கிறது என்று, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அறிக்கை மூலம் வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின், சுழற்பந்துவீச்சில் உலக சாதனை படைத்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, “800” என்ற திரைப்படம் தயாரிக்க முடிவானது.

இந்த படத்தில், முரளிதரன் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டு, அதன் போஸ்டரும் வெளியானது. ‘800’ படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இலங்கைப்போரின் போது, தமிழர்களுக்கு எதிராக முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்தார்; எனவே, அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் நடிப்பதை நடிகர் விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும் என்று, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கல் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேபோல், விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பரவலாக நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், விஜய் சேதுபதி தனது முடிவை அறிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக பாஜக உள்ளிட்டவை குரல் கொடுக்க தொடங்கியுள்ளன.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இலங்கை உள்நாட்டு போரின்போது என்‌ ஏழு வயதில்‌ எனது தந்தை வெட்டப்பட்டார்‌. என்‌ சொந்தங்களில்‌ பலர்‌ பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில்‌ நின்றிருக்கிறோம்‌.

ஆதலால்‌, போரால்‌ நிகழும்‌ இழப்பு அதனால்‌ ஏற்படும்‌ வலி என்ன என்பது எனக்கும்‌ தெரியும்‌. முப்பது வருடங்களுக்கு மேல்‌ போர்‌ சூழ்நிலையில்‌ இருந்த நாடு இலங்கை. அதன்‌ மத்தியிலேயேதான்‌ எங்கள்‌ வாழ்க்கைப் பயணம்‌ நடைபெற்றது. இந்தச் சூழ்நிலையில்‌ இருந்து எப்படி நான்‌ கிரிக்கெட்‌ அணியில்‌ இடம்பெற்று சாதித்தேன்‌ என்பது பற்றியதுதான் ‘800’ என்ற திரைப்படம்.

அதேநேரம், என்னை ஈழத்தமிழர்களுக்கு எதிரானவன் போல் என்னை சித்தரிக்க சிலர் முயலுகிறார்கள். ‘800’ திரைபடத்தை பல்வேறு காரணங்களுக்காக அரசியல் ஆக்குகிறார்கள். இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?

மலையகத் தமிழனான நான் ஈழத் தமிழர்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்துள்ளேன். 2002ம் ஆண்டு விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு சென்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்துள்ளேன்.

போர் முடிந்த பிறகு எனது அறக்கட்டளை மூலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு நான் செய்த உதவிகள் அதிகம். எனது சாதனைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே 800 திரைப்படத்தை எடுக்க சம்மதித்தேன்.

போர் முடிவுற்றதால் தான், 2009ம் ஆண்டை என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று கூறினேன். ஆனால், தமிழர்களை கொன்று குவித்த நாளை நான் மகிழ்ச்சியான நாளாக கூறியதாக அவதூறு பரப்புகிறார்கள். அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை ஒரு போதும் நான் ஆதரித்தது இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்

இவை அனைத்தையும்‌ விடுத்து, சிலர்‌ அறியாமையாலும்‌ சிலர்‌ அரசியல்‌ காரணத்திற்காகவும்‌ என்னைத் தமிழ்‌ இனத்திற்கு எதிரானவர்‌ என்பது போல்‌ சித்தரிப்பது வேதனையளிக்கிறது. எவ்வளவு விளக்கம் அளித்தாலும்‌ எதிர்ப்பாளர்கள்‌ யாரையும்‌ சமாதானப்படுத்த முடியாது என்றாலும்‌, என்னைப்‌ பற்றி ஒரு பக்கம்‌ தவறான செய்திகள்‌ மட்டுமே பகிரப்பட்டு வரும்‌ நிலையில்‌ நடுநிலையாளர்களுக்கும்‌ பொது மக்களுக்கும்‌ இவ்விளக்கத்தை அளிக்கிறேன்‌ என்று முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!