உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.90 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.
இந்தசூழலில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அங்கு மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,90,26,579 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,56,04,265 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் உயிரிழந்துள்ளனர்.