என் மகன் மீது பொய்ப்புகார் அளிக்கப்பட்டுள்ளது, சித்ராவை தற்கொலைக்கு துாண்டியவர்கள் யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தனியார் ஓட்டலில் பிரபல டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமாகி 2 மாதங்களே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. சித்ரா பல கோடி கடன் வாங்கியதாலும், கணவரின் டார்ச்சராலும் தற்கொலை செய்து கொண்டார் என போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
அதனையடுத்து சித்ராவை தற்கொலைக்கு துாண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கடந்த 14ம் தேதியன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது ஆர்டிஓ விசாரணை ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘சித்ரா டிவி சீரியலில் பிசியான புகழ்பெற்ற நடிகை என்று தெரிந்துதான் என் மகனுக்கு அவரை பேசி முடிவு செய்தோம். இருவரும் ஒரே ஜாதி என்பதால் சித்ரா – ஹேம்நாத்தின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த இரு வீட்டாரும் பேசி முடிவு செய்தோம். சித்ராவுக்கு 35 பவுன் நகை போட்டு திருமண நிச்சதயதார்த்தத்தை பிரம்மாண்டமாக நடத்தினோம். மேலும் சித்ரா வீட்டில் பெண்ணுக்கு 50 பவுன் போடுவதாக தெரிவித்தனர்.
சித்ராவுக்கு நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் தெரியும் என்பதால் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த முடிவு செய்தார்கள். மேலும் சித்ரா டிவி சீரியலில் அதிக அளவு சம்பாதித்ததால் அவரை திருமணம் செய்து கொடுத்தால் வருமானம் போய் விடும் என்பதால் அவரது தாயார் ஏற்கனவே ஒரு திருமணத்தை தடுத்து நிறுத்தி விட்டார்களாம்.
அதனால் முன்னதாக பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என சித்ரா எங்களிடம் தெரிவித்தார். அதன்படியே பதிவு திருமணம் செய்தோம். மேலும் திருமணத்துக்கு பணம் அந்த அளவுக்கு இல்லை என சித்ராவின் பெற்றோர் சொன்னதும் அதற்கென்ன நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்தோம்.
‘என் அப்பா அம்மாவுக்கு 60ம் கல்யாணத்தை நான் செலவு செய்து நடத்தி வைத்தேன். என் திருமணத்துக்கு பணம் இல்லை’ என்று சொல்கிறார்கள் என சித்ரா எங்கள் வீட்டுக்கு வந்து வருத்தப்பட்டார். அதற்கென்னம்மா பரவா இல்லை என்று நாங்கள் சித்ராவுக்கு ஆறுதல் தெரிவித்தோம். இந்நிலையில் சித்ரா கடந்த ஆண்டு திருவான்மியூரில் 1 1/2 கோடிக்கு வீடு வாங்கியதாகவும், 1 கோடிக்கு புதிதாக ஆடி கார் வாங்கியதாகவும் அறிந்தோம்.
பிப்ரவரி மாதம் திருமணம் நடத்த முடிவு செய்தோம். அப்போதுதான் சம்பவத்தன்று அதிகாலையில் என் மகன் எனக்கு போன் செய்து சித்ரா தற்கொலை செய்து கொண்ட விஷயத்தை தெரிவித்தார். தொடர்ந்து என் மகனை விசாரித்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சித்ராவின் சாவுக்கு என் மகன் காரணமில்லை. அவருக்கு அரசியல் ரீதியாகவும், தொழில் அதிபர்கள் என பலரிடம் அடிக்கடி செல்போனில் பேசியபடியே இருப்பார்.
சரி அவர் சீரியல் நடிகை நிறைய நண்பர்கள் இருப்பார்கள் என்பதால் அதில் நாங்கள் தலையிடவில்லை. ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை. இதனால் சித்ராவின் தற்கொலை தொடர்பாக அவரது செல்போனை ஆய்வு செய்து அதில் பேசிய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அவருக்கு அழுத்தம் கொடுத்த நபர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.