இதில் நேற்று மாலை அரங்கேறிய 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிகமான நேரம் (57 சதவீதம்) சென்னையின் எப்.சி. வசமே சுற்றிக்கொண்டிருந்தாலும் எதிரணியின் தடுப்பு அரணை கடைசி வரை உடைக்க முடியவில்லை. அதே சமயம் 66-வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை கவுகாத்தி வீரர் இட்ரிசா சைலா நழுவ விட்டார். முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இந்த சீசனில் டிரா ஆன 11-வது ஆட்டம் இதுவாகும்.
சென்னை அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி என்று 5 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கிறது. 6-வது ஆட்டத்தில் ஆடிய கவுகாத்தி அணிக்கு இது 4-வது டிராவாகும். இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.