கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் நேற்று ஓடைகுளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரடிகுளம் சின்னகாலனியைச் சேரந்த செல்லபெருமாள் மகன் சுகேஷ்(9) என்ற சிறுவன் தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த கலையரசன் மகன் கரண்(11) மற்றும் முத்துகிருஷ்ணன் மகன் சிவசங்கர் (9) ஆகியோருடன் நேற்று(01.12.2020) மதியம் கரடிகுளத்தில் உள்ள ஒரு ஒடைகுளத்தில் குளிக்க சென்றுள்ளனர். இதில் சுகேஷ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி இறந்துள்ளான். நீரில் மூழ்கிய மற்ற இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுகேஷின் தந்தை செல்லபெருமாள் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், இப்போது பருவ மழை காலம் என்பதால் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் மழை தண்ணீர் அதில் தேங்கி நிற்கும். அதில் ஆழம் எவ்வளவு என்பது சிறுவர்களுக்கு தெரியாது. இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல அரசரடி கண்மாயில் தனியாக குளிக்க சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தழனர். பெற்றோர்கள் எப்போதும் தங்கள் கண்காணிப்பில் மட்டுமே சிறுவர்களை குளம் மற்றும் கண்மாய்களுக்கு குளிக்க அழைத்து செல்ல வேண்டும். குழந்தைகளை தனியாக அனுப்புவதை பெற்றோர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் பெற்றோர்கள், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.