சென்னை
சென்னை ராயபுரத்தில் கடத்தப்பட்ட அஸ்ஸாம் தொழிலாளியின் 2 1/2 வயது பெண் குழந்தையை பத்திரமாக மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பப்லு (வயது 40). இவர் தனது மனைவி, 10 வயது ஆண் குழந்தை, 6 மற்றும் 2 1/2 வயது பெண் குழந்தைகளுடன் சென்னை ராயபுரம் ரயில் நிலைய உள்பகுதியில் நடைபெற்று வரும் கட்டட பணியில் வேலை செய்து வந்தார். இரவில் அங்கேயே தங்கிக் கொள்வார்.
பப்லுவுக்கு அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் என்ற இளைஞர் அறிகமுகமாகி பப்லுவுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதியன்று பப்லுவின் குழந்தைகளுக்கு உணவு வாங்கிதருவதாக கூறி 2 1/2 வயது குழந்தையை அவர் கடத்திச் சென்று விட்டார். இது குறித்த பப்லு ராயபுரம் போலீசில் புகார் அளித்தார்.
கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அருண், இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் ராயபுரம் இன்ஸ்பெக்டர் காசியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த 60க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். சுனில் குழந்தையை அழைத்துக் கொண்டு செல்வதும், பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்வதும் அதில் பதிவாகி இருந்தது.
இதற்கிடையே பப்லுவின் வீட்டில் விட்டுச் சென்ற துணிப்பையில் இருந்த அஸ்ஸாமைச் சேர்ந்த ஒருவரது செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை செய்தனர். அதில் சுனில் குழந்தையுடன் செங்கல்பட்டு அருகே உள்ள நாவலூரில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் நாவலுார் சென்று கடத்தப்பட்ட 2 வயது குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்ந்து பத்திரமாக குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார். அப்போது அவருடன் கூடுதல் கமிஷனர் அருண், வடக்கு மண்டல இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.