கொரோனாவில் முன்களப்பணியாளராக பணிபுரிந்த தனது பெயரை போலீஸ் கமிஷனரின் ரிவார்டு பட்டியலில் சேர்க்காமல் அதிகாரிகள் பழிவாங்கி விட்டதாக ஊர்க்காவல் படை வீரர் வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நகரில் கொரோனா தொற்றில் பாதிப்படைந்து சிகிச்சை பெறும் காவலர் ஆளிநர்களை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். நேற்று முன்தினம் சென்னை வேளச்சேரியில் நடந்த நிகழ்ச்சியின் போது கொரானாவில் சிறப்பாக பணியாற்றிய ஊர்காவல் படை வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கமிஷனர் கவுரவித்தார்.
இந்நிலையில் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தனது பெயரை கமிஷனரின் பதக்கப்பட்டியலில் சேர்க்கவில்லை என கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த மயிலாப்பூர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் குற்றம் சாட்டி தனது குமுறல்களை வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார்.
‘‘கடந்த மாதம் 29ம் தேதி கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு கிண்டி ஐஐடி கோவிட் சென்டரில் தனிமையில் இருந்தேன். கடந்த 10ம் தேதி குணமடைந்து பணிக்கு சேர்ந்தேன். ஆனால் கமிஷனர் தலைமையில் நடந்த பதக்க பட்டியல் விழாவில் எனது பெயர் இல்லை. அது குறித்து ஊர்க்காவல் படை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது எனது பெயரை பரிந்துரை செய்யவில்லை என பதில் அளித்தனர். பின்னர் கூடுதல் கமிஷனர் தினகரன் முகாம் அலுவலகத்தில் சென்று கேட்டபோது அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது என தெரிவித்தனர். எனக்கு உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக எனது பெயரை பட்டியலில் சேர்க்காமல் விட்டுள்ளனர். கமிஷனரால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ் எனக்கு பதவி உயர்வு வழங்க வழிவகுக்கும். அதனால் அதனை எனக்கு கிடைக்கச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என அந்த வீடியோவில் கூறியுள்ள ரஞ்சித் ஊர்க்காவல் படை சங்கத்தில் உள்ள அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னை பழிவாங்குவதாகவும் ரஞ்சித் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
லாக்டவுன் சமயத்தில் தனது வீட்டில் தங்கியிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 5 பேரிடம் 3 மாத வீட்டு வாடகை வசூலிக்காமல் அவர்களுக்கு 30 நாட்கள் 3 வேளை உணவளித்து, கையில் செலவுக்கு காசும் கொடுத்த ரஞ்சித் அவர்களை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்று ரயிலில் வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.