சென்னை நகரில் காணாமல் போன மற்றும் திருடு போன 1,193 செல்போன்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைபர்கிரைம் போலீஸ் மூலம் மீட்கப்பட்டன. சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அவற்றை நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
சென்னை நகரில் கடந்த மாதம் 12 காவல் மாவட்டங்களிலும் சைபர்கிரைம் சிறப்புப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. செல்போன்கள் திருடு மற்றும் காணாமல் போனதாக வரும் புகார்களில் புகார்கள் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். செல்போன்களின் IMEI குறியீட்டு எண்களை கொண்டும், செல்போன் நிறுவனங்களின் உதவி கொண்டும் போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆட் கடத்தல், குற்ற வழக்கு தொடர்பாக குற்றவாளிகளின் இருப்பிடம் அறிந்து கைது செய்தல் போன்ற முக்கிய தருணங்களிலும், 12 காவல் மாவட்ட சிறப்பு சைபர் குற்றப்பிரிவு குழுவினர் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் சென்னையில் 4 காவல் மண்டலங்களிலும், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு அந்த செல்போன்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் வடக்கு மண்டலத்தில் 333 செல்போன்கள், மேற்கு மண்டலத்தில் 219, தெற்கு மண்டலத்தில் 424, கிழக்கு மண்டலத்தில் 217 என மொத்தம் 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான செல்போன்கள் சென்னை மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழக மாவட்டங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சைபர்கிரைம் போலீசார் பறிமுதல் செய்த 1,193 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்தது.
போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் 240 செல்போன்களை, 12 காவல் மாவட்டங்களிலிருந்தும் வந்த செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மீதம் கண்டறியப்பட்டுள்ள செல்போன்கள் அந்தந்த காவல் மாவட்ட உயரதிகாரிகள் மூலம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக போலீசார் சார்பில் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர தலைமையிட கூடுதல் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், தெற்கு கூடுதல் கமிஷனர் தினகரன், வடக்கு கூடுதல் கமிஷனர் அருண் மற்றும் வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன், கிழக்கு சென்னை இணைக்கமிஷனர் சுதாகர் மற்றும் துணைக்கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.