சென்னை கோட்டூர்புரத்தில் காணாமல் போன 2 சிறுமிகளை புகார் அளித்த 6 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோட்டூர்புரம் போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை, கோட்டூர்புரம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்று காலையில் தனது சித்தியின் 8 வயது மகளுடன் சேர்ந்து 13 வயது சிறுமி வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இரவு 10 மணியளவில் கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காணாமல் போன குழந்தைகளை விரைந்து கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் சுதாகர், மயிலாப்பூர் துணைக்கமிஷனர் சஷாங்சாய் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமி வசிக்கும் வீட்டினருகில் சிறுமியை தேடினர். மேலும் மயிலாப்பூர் சைபர்கிரைம் பிரிவு போலீசார் சிறுமியின் செல்போனை ஆய்வு செய்தில் சிறுமிகள் இருவரும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு ரயிலில் சென்றிருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் விழுப்புரம் அருகே பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் காணமால் போன 2 சிறுமிகள் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்து கோட்டூர்புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விழுப்புரம் ரயில்வே போலீஸ் மற்றும் அந்த ரயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகருக்கு தொடர்பு கொண்டு பேசினர். 2 குழந்தைகளையும் விழுப்புரம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கும்படி தெரிவித்தனர். அதன்படி விழுப்புரம் ரயில்வே போலீசார் 2 குழந்தைகளையும் ரயிலிருந்து மீட்டனர். கோட்டூர்புரம் போலீசார் விரைந்து சென்று 2 சிறுமிகளையும் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு காணாமல் போன இரண்டு சிறுமிகளையும் 6 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கோட்டூர்புரம் போலீசாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.