500 கிலோ தங்க நகை மோசடி தொடர்பாக குற்றவாளிகள் தெலுங்கானாவில் சிக்கியது எப்படி என்பது குறித்தும், நகைகள் எங்கே பதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் சார்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தி.நகரில் உள்ள ‘ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் அண்ட் பேங்க்ர்ஸ்’ என்ற நிறுவனம் பொதுமக்களுக்கு வட்டியில்லா தங்க நகைக்கடன் வழங்கி வந்தது. ஆம்பூரைச் சேர்ந்த சையது ரகுமான் மற்றும் அவருடைய தம்பி அனிசூர் ரகுமான் ஆகியோர் இந்த நிறுவனத்தை இணைந்து நடத்தி வந்தனர். கடந்த 2010ம் ஆண்டு முதல் ஏராளமானவர்களுக்கு இந்த நகைக் கடனை வழங்கி வந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வைத்த நகைகளை சரியான முறையில் திருப்பி கொடுத்து வந்துள்ளனர். அதன்பிறகு கடன் பெற்றவர்கள் அவற்றை திரும்பக் கேட்கும்போது நகையை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து திடீரென சையது ரகுமான் அவருடைய தம்பி அனிசூர் ரகுமான் மற்றும் அதில் வேலை செய்துவந்த ரிகானா என்கிற அருணா ராணி, சஜிதா என்கிற வளர்மதி, ஷஹுனா என்கிற சிவகாமி ஆகியோர்கள் தலைமறைவானார்கள்
இதனையடுத்து ரூபி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட 3,380 மேற்பட்டோர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். சுமார் 500 கிலோவுக்கும் மேலாக தங்க நகையை பொதுமக்களிடம் இருந்து பெற்று சுமார் ரூ. 50 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. மெகா மோசடி என்பதால் இந்த வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்து பொருளாதாரக் குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. போலீசார் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சையது ரகுமான் அவருடைய தம்பி அனிசூர் ரகுமான் மற்றும் அதில் வேலை செய்துவந்த ரிகானா என்கிற அருணா ராணி, சஜிதா என்கிற வளர்மதி, ஷஹுனா ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெலுங்கானாவில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் 500 கிலோ நகைகள் மோசடி தெடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐந்து பேரும் பிடிபட்டது எப்படி என்பது குறித்து பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறியதாவது:–
சையது ரஹ்மான், அனிசூர் ரஹ்மான் ஆகியோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் தெலுங்கானாவிற்கு சென்று அங்கு பத்து நாட்களுக்கும் மேலாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்கியிருந்து விசாரணை நடத்தினர். இதில் சையது ரகுமானின் பெற்றோர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரியவந்ததும் அந்த ஆஸ்பத்திரிக்கு போலீசார் சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த முகவரியை விசாரித்த போது அங்கிருந்து அவர்கள் காலி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் சையத் ரகுமானின் பெற்றோர் இருவரும் உயிரிழந்ததும் தெலுங்கானாவில் உள்ள ஒரு மசூதிக்கு சொந்தமான இடத்தில் அவர்களை அடக்கம் செய்ததும் தெரியவந்தது. அந்த மசூதி முகவரியை வைத்து போலீசார் அங்கும் சென்றபோது சையத் ரகுமான் அங்கிருந்தும் தப்பிச்சென்றது போலீசாருக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் அவரது பெற்றோரின் உடல்களை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் மூலம் சையத் ரகுமானின் உண்மையான இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து 5 வளைத்துப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் சென்னையில் மோசடி செய்த பொதுமக்களின் 500 கிலோ தங்க நகை எங்கு உள்ளது என்பது குறித்து பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்க நகைகளை இரண்டு தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், அடகுக் கடை உள்ளிட்ட இடங்களில் அடமானம் வைத்திருப்பதும் கதீட்ரல் வங்கி, பெடரல் வங்கி, இன்போ லைன் வங்கி மற்றும் முத்துாட் நிறுவனத்தின் ஐந்து பிரிவுகளிலும் தங்க நகையை அடமானம் வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் தனியார் அடகு கடைகளிலும் தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.
மொத்தமாக ஐந்து நிதி நிறுவனங்கள் 3 தனியார் வங்கிகள், அடகுக்கடை உள்ளிட்ட இடங்களில் சுமார் 350 கிலோ தங்க நகை அடமானம் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள தங்க நகைகளை வைத்து சுமார் 20 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வாங்கிப் போட்டிருப்பதையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட சொத்துக்களை முடக்கவும் அதே சமயத்தில் திவால் அறிவிப்பு கொடுத்துள்ளதால் அதற்காக அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.