பெரியகுளம் அருகே, குளத்து நீரை பயன்படுத்தி முதல் போக நெல் சாகுபடி துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த மாதம் முதல் பரவலாக பெய்த மழையால் வடகரை பகுதியில் உள்ள குளங்களில் நீர் நிரம்பி இருக்கிறது. எனவே, அந்த பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலங்களில், முதல்போக சாகுபடி பணிகள் முழுவீச்சில் தொடங்கி இருக்கிறது.
பெரியகுளம் அருகே உள்ள நடுபரவு ஆண்டிகுளம், வேளாங்குளம், உள்ளிட்ட பகுதியில் நெல் சாகுபடியை, 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். என்.எல்.ஆர் என்ற ரக நெல்லை நடவு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்யும் என்பதால், இவ்வாண்டு முதல் போக சாகுபடி நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று விவசாயிகல் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்பகுதியில் உள்ள குளங்களை முறையாக தூர்வாரினால் கோடையில் குளத்து நீரை பயன்படுத்தி இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், குளங்கள் தூர்வாராத நிலையில் இரண்டாம் போக விளைச்சல் செய்ய முடியாத சூழல் இருப்பதாக, விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
எனவே, பெரியகுளம் பகுதியில் உள்ள குளங்களை தூர்வாருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.