சீர்காழியில் மழைநீரில் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை

வடகிழக்கு பருவமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி காலை 8 வரை 12 மணி நேரத்தில் சுமார் 22 சென்டிமீட்டர் மழை பதிவானது. திடீர் கனமழையால் சீர்காழி கொள்ளிடம் பூம்புகார் சுற்றுவட்டார பகுதி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் என பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில சீர்காழி, தரங்கம்பாடி,கொள்ளிடம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் வடிகால் ஆறு மற்றும் வாய்க்கால்கள் மூலம் கறைகளில் உடைப்பு ஏற்பட்டும் கரைகளை கடந்து வெளியேறிய நீரும் விளை நிலங்களுக்குள் முழுவதுமாக உட்புகுந்தது இதன் காரணமாக எடமணல், வடகால், ஆரப்பள்ளம், திருவாலி, மணல்மேடு, நிம்மேலி, புதுத்துறை, குரவலூர், நெப்பத்தூர், திருநகரி, மங்கைமடம் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் 30ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கியது.

நேற்று மழை சற்று ஓய்ந்திருந்ததால் விளைநிலங்களில் தேங்கிய நீரை அப்புறப்படுத்த விவசாயிகள் முயன்று வந்தனர்.இந்நிலையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை தொடங்கியதால் இரண்டாவது நாளாக 30 ஆயிரம் எக்கர் சம்பா பயிர் விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் வடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். வடிகால் ஆறு மற்றும் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாததாலும் பிரதான வடிகால் ஆறுகளில் ஆகாயதாமரை சூழ்ந்ததாலும் மழைநீர் வடியாமல் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிளை வாய்க்கால்கள் தூர்வாராமல் ஆழம் குறைந்தும் புதர்கள் மண்டியும் இருப்பதால் தண்ணீர் வெளியேற தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். உடைப்பு ஏற்பட்ட இடங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தாலும் மழை குறைந்தால் மட்டுமே தண்ணீர் வடியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அனைத்து வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும் பிரதான வடிகால் ஆறுகளில் ஆக்கிரமைத்துள்ள ஆகாயதாமரையை அகற்ற வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!