இனி தமிழகம் முழுவதும் போலீசாருக்கு வாரம் ஒரு நாள் ஷிப்ட் முறையில் லீவு வழங்கப்படும் என தமிழக சட்டம், ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் போலீசார் குஷியில் உள்ளனர்.
தமிழக காவல்துறையில் பணிச்சமை காரணமாக காவல்துறையினர் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் காவலர்கள் பணிச்சுமை பல மடங்கு அதிகமாக உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு ஷிப்ட் முறையில் வார விடுமுறை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக காவலர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது. ஆள் பற்றாக்குறை காரணமாக வார விடுமுறை வழங்குவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்படவில்லை.
அது தொடர்பாக தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபி திரிபாதி மற்றும் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆகியோர் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதனையடுத்து போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஷிப்ட் முறையில் விடுமுறை வழங்கி சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக தமிழகம் உள்ள அனைத்து போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்களுக்கு வாய்மொழியாக தனது உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி அலுவலக தரப்பு கூறுகையில், ‘‘தமிழக சட்டம்- ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சமீபத்தில் காவல்துறையினர் நலன் சார்ந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார். அதில், 6 நாள் வேலை பார்த்தால் ஒரு நாள் விடுப்பு கொடுக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் மட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமலும், மன உளைச்சல் காரணமாக காவலர்கள் அதிகம் உயிரிழப்பதால், இதனைத் தடுக்க, வார விடுப்பை கட்டாயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாளாக இந்த கோரிக்கை இருப்பதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போலீசார் அவரவர் சூழலுக்கு ஏற்ப வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது’’ இவ்வாறு தெரிவித்தனர்.சிறப்பு டிஜிபியின் இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதனால் தமிழகம் முழுவதும் காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியும், குஷியும் ஏற்பட்டுள்ளது.