கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் வழியில் தனக்குத்தானே கழுத்தை அறுத்த கைதியால் பரபரப்பு

சென்னை மீனம்பாக்கத்தில் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதி தனக்கு தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, ‘‘சென்னை, மாங்காடு, லீலாவதி நகர், 19வது தெருவைச் சேர்ந்தவர் ஜான்பால் (எ) கருப்பு (வயது 26). இவர் மீது மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. கடந்த 1ம் தேதியன்று கருப்பு, சென்னை குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கில் கைதாகி சிறை சென்றார். விரைவில் அவர் ஜாமினில் வெளிவரவுள்ள நிலையில் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கில் அவரை ஆலந்துார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடிவாரண்டு உத்தரவை புதுப்பிப்பதற்காக மீனம்பாக்கம் போலீசார் முடிவு செய்தனர். அதனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜான்பாலை நேற்று காலை 11.25 மணியளவில் ஆலந்துார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக மீனம்பாக்கம் தலைமைக்காவலர்கள் காசிநாதன், அண்ணாதுரை ஆகியோர் போலீஸ் வாகனத்தில் அழைத்துச்சென்றனர்.

அப்போது திடீரென ஜான்பால் பிளேடால் தனது கழுத்து மார்பு என தாறுமாறாக அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை மீட்டு சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஜான்பாலை அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் கஸ்டடியில் கைதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!