தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது.
ஊட்டி மற்றும் ஏற்காடு பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகிறார்கள். குறிப்பாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள்.கொடைக்கானலில் விதிமுறை மீறிய 307 வணிக கட்டிடங்கள் கொடைக்கானல் நகராட்சியால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதன் காரணமாக அதிக அளவில் தங்கும் விடுதிகள் இல்லை. ஆனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் உள்ளது. இது தவிர அனுமதி இல்லாத காட்டேஜ்கள் புற்றீசல் போல் முளைத்து உள்ளன. தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த தங்கும் விடுதிகள், மற்றும் அனுமதியற்ற காட்டேஜ் களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளின் வருகையை ஒட்டி கட்டணக் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு சாதாரண தங்கும் அறைக்கு 3,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஒரு நாள் தங்கும் கட்டணமாக பெறப்படுகிறது. இதற்கு ஒத்துவராத சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது இல்லை ,இந்த கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டும் வருகிறது .இந்த கட்டண கொள்ளை காரணமாக சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அனுமதியற்ற காட்டேஜ்கள் மற்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் தங்கும்விடுதிகள் ஆகியவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு போதிய வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுமதி அற்ற தங்கும் விடுதிகள் காட்டேஜ்கள் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது