கொடைக்கானல் மலைப்பகுதியில் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள பகுதிகளிலும் மிகுந்த ஆபத்தான பகுதிகளிலும் டென்ட் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைக்கும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது.
இந்த ஆபத்தான கலாச்சாரம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் உடமைக்கும் அச்சம் ஏற்பட்டு வருகிறது. இதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கூக்கால் பகுதியில் டென்ட் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுமார் 20 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கொடைகாானல் வட்டக்கானல் பகுதியில் டென்ட் அமைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து கொடைக்கானல் வருவாய் கோட்டாசியர் முருகேசன் ,வட்டாசியர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அங்கு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த டெண்டுகள் எனப்படும் தற்காலிக கூடாரங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. டென்ட் கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. டென்ட் கூடாரங்கள் அமைக்கப்பட்ட இடத்தின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி கொடைக்கானல் வருவாய் கோட்டாசியர் முருகேசன் கூறியதாவது. கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்ட் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைப்பது குற்றமாகும். அப்படி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . இதுபோன்ற கூடாரங்களில் தங்கும் சுற்றுலாப்பயணிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.