கொரோனா அச்சம்.. சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 30 உள்நாட்டு விமானங்கள் ரத்து

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அச்சம் காரணமாக,போதிய பயணிகள் இல்லாமல் சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 30 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகத்தை மிகப்பெரிய அளவில்  தாக்கிவருவதால்,தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.இரண்டாவது அலையின் தாக்கம் குறிப்பாக சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூா்,காஞ்சீபுரம்,கோவை மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளது.

இதனால் மக்களிடையே பெரும் பீதி,அச்சம் நிலவுகிறது.பயணிகள் பலா் தங்களது வெளியூா் பயணங்களை ரத்து செய்துவிட்டனா்.குறிப்பாக விமானப்பயணிகள் பலா் தங்களது பயணங்களை தவிா்த்துவிட்டதால் சென்னை உள்நாட்டு விமானநிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதில் 15 விமானங்கள் சென்னையிலிருந்து கோவை,ஹைதராபாத்,மும்பை,பெங்களூா்,கொச்சி,திருவனந்தபுரம்,புவனேஸ்வா்,கோவா,இந்தூா்,புனே ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்கள்.

அதைப்போல் இந்த இடங்களிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 15 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவைகள் தவிர சென்னையிலிருந்து வெளிமாநிலங்கள்,வெளிமாவட்டங்களுக்கு இன்று 97 விமானங்களும்,அதைப்போல் சென்னைக்கு வரும் 98 விமானங்களும் மொத்தம் 195 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அந்த விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. பல விமானங்கள் பயணிகள் இல்லாமல் காலியாகவே இயங்குகின்றன. இதற்கு காரணம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது.அதோடு விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்பாக பயணிகளுக்கு கொரோனா நெகடீவ் சான்றிதழ், பாஸ், நடு இருக்கை பயணிகள் கவச உடை அணிந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளிட்ட சில காரணங்களால் பயணிகள் விமான பயணத்தை விரும்பாமல் தவிா்க்கின்றனா் என்று கூறப்படுகிறது. இதே நிலை தொடா்ந்தால் விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனா்.

Translate »
error: Content is protected !!