தமிழகத்தில் கொரோனா நோய் இரண்டாவது அலை பரவலின் தாக்கம் மின்னல் வேகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதில் தேனி மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 600பேர் வரை பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்நிலையில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு உத்தரவை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.
அதன்படி பால், மருந்தகம், மருத்துவமனை போன்ற அவசர தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தேனி மாவட்ட எல்கையான கட்ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு சோதனை சாவடியை ஆய்வு மேற்கொண்ட பின்பு காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, லட்சுமிபுரம், அன்னசி, உள்ளிட்ட ஊராட்சிகளில் காவல்துறையினர் மூலம் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி இன்று நேரில். ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது ஊராட்சி அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு குறித்து ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ந்து அறிவித்துவது மக்களை வெளியில் நடமாட்டத்தை குறைக்க காவல்துறையினருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது தேனி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்ரீ மற்றும் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.