தமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 20ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர +2 பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு:
கடந்த 24 மணி நேரத்தில் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 29 பேர் உட்பட 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,91,451ஆக உயர்ந்துள்ளது. தினசரி உயிரிழப்புதமிழ்நாட்டில் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 42 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,113ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,10,130 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 2,11,87,630 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிஸ்சார்ஜ் & ஆக்டிவ் கேஸ்கள்:
ஒரே நாளில் மட்டும் மாநிலத்தில் 5,925 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 70,391ஆக அதிகரித்துள்ளது.நேற்று மாநிலத்தில் 65,635 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக தற்காலிக மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 3304 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சிகிச்சை பலனின்றி 16 பேர் உயிரிழந்துள்ளனர், அதேபோல சென்னையில் தற்போது 25,011 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டில் 954 பேருக்கும் கோவையில் 727 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.