கொல்லம் கடலில் குதித்த ராகுல்காந்தி..! மீன் வலையை சரி செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்

கொல்லம்,

யாரும் எதிர்பார்க்காத நிலையில் கொல்லம் கடலில் குதித்த ராகுல்காந்தி, மீன் வலையையும் சரி செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து கொல்லம் வாடி கடற்கரைக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க மோட்டார் பொருத்திய படகில் புறப்பட்டுச் சென்றார். கடலில் மீனவர்களுடன் வலை விரித்தார்.

அந்த சமயத்தில் சில மீனவர்கள் கடலில் குதித்து, மீன்கள் தப்பிச் செல்லாமல் இருக்க வலையை சரி செய்தனர். எதற்காக மீனவர்கள் கடலில் குதித்தார்கள் என்பதை கேட்டறிந்த ராகுல்காந்தி, திடீரென அவரும் கடலில் குதித்து, வலையை சரிசெய்தார். பின்னர் சிறிது நேரம் கடலில் நீந்திய ராகுல்காந்தி, தொடர்ந்து மீண்டும் வள்ளத்தில் ஏறி, கடலில் வீசியிருந்த மீன்பிடி வலையை மீனவர்களுடன் இணைந்து இழுத்தார்.

அந்த வலையில் சில கணவாய் மீன்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அதை பார்த்த ராகுல்காந்தி, நான் நிறைய மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை அறிந்துகொண்டேன். உங்கள் கடின உழைப்பை பாராட்டுகிறேன். நான் என்றும் உங்களுடன் இருப்பேன் என நெகிழ வைத்திருக்கிறார்.

ராகுல்கந்தி வழக்கம்போல பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் படகில் ஏறியிருக்கிறார். அவருடன் இரண்டு பாதுகாவலர்கள் மட்டுமே சென்றிருக்கிறார்கள். கடலில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் சென்று மீன் பிடித்திருக்கிறார் ராகுல் காந்தி.

வலையை சரிசெய்ய கடலில் குதிக்க முயன்றபோது, சிலர் தடுத்திருக்கிறார்கள். அதற்கு ராகுல் காந்தியின் பிரைவெட் செக்கரட்டரி அலங்காய் சவாய், ‘அவர் ஸ்கூபா டைவிங் தெரிந்தவர். ஒரு பிரச்னையும் இல்லைஎனக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், “ராகுல் காந்தி கடலுக்கு வருவது யாருக்கும் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாபன், தனது உறவினர் ஒருவர் படகில் கடலுக்கு வருவதாக கூறியிருந்தார். அவருடன் எம்.பி. கே.சி.வேணுகோபாலன் வந்திருந்தார். மாஸ்க் அணிந்திருந்ததால், முதலில் ராகுல் காந்தியை அடையாளம் தெரியவில்லை. மாஸ்க் கழற்றிய பிறகுதான் அடையாளம் கண்டு கொண்டோம் என்று பெருமிதத்துடன் கூறி உள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!