கோர்ட்டு வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 1,027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனையடுத்து டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசார் நீதிமன்றம் வரையறுத்த நேரம் தவிர மீறி மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தது தொடர்பாக தீவிரமாக கண்காணித்தனர். அதன்படி தமிழகத்தின் வடக்கு மண்டல மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், திருப்பத்துார் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய மண்டலமான திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 6 வழக்குகளும், மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 71 வழக்குகளும், தென்மண்டலமான மதுரை, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 142 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் சேலம், மதுரை, நெல்லை, திருப்பூர், சேலம் உள்பட 6 கமிஷனரேட்டுக்களில் 254 வழக்குகள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 599 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதே போல சென்னை நகரில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக மொத்தம் 428 வழக்குகள் புதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 1,027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.