கோவையில் உள்ள தனியார் மருந்து குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான மருந்துகள் எரிந்து நாசமானது. கோவை சிங்காநல்லூரை அடுத்த உழவர் சந்தை அருகே பிரபல மருந்துக்கடை ஒன்றின் மருந்து குடோன் உள்ளது.
இந்த குடோனில் மருந்துகள் மொத்தமாக இருப்பு வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மருந்து குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவ தொடங்கியது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடோன் காவலாளிகள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.
இதில் குடோன் சேதமடைந்ததுடன் பெட்டி, பெட்டியாக வைக்கப்பட்டிருந்த உடல்நலம் காக்கும் மருந்துகள் முதல் உயிர் காக்கும் மருந்துகள் வரை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என தெரியவந்துள்ளது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.