சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிப்பது என்று, கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து, இருமுடிகட்டிச் செல்வது வழக்கம். இந்தாண்டு, கொரோனா தொற்று பரவும் ஆபத்து கருதி சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கேரள அரசு விதித்துள்ளது.
அதன்படி, பம்பையில் குளிப்பதற்கு தடை, கொரோனா நெகட்டிவ் சான்று இருக்க வேண்டும், இரு இடங்களில் கொரோனா பரிசோனை என பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளன. அத்துடன் தினசரி 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறுக்கிழமைகளில் 2,000 பக்தர்களுக்கும் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.
அதேநேரம் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை நேரம் என்பதால், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப்ப்பட்டது.
கேரள அரசு இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, தினசரி 2,000 பக்தர்களுக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 4,000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கலாம் என்ற கேரள தேவசம் போர்டு பரிந்துரைக்கு கேரள அரசு ஒப்புதல் தந்துள்ளது. அத்துடன், நாளை முதல் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பக்தர்கள் தரிசனம் செய்ய வரலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.