சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒடிசா எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பேக்ஸ்டரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியிடம் தோல்வி கண்டது.
இந்த போட்டியின் போது ஒடிசா அணி வீரர் டிகோ மவுரிசியோவை, கோல் எல்லை பகுதிக்குள் ஜாம்ஷெட்பூர் அணியின் கோல்கீப்பர் ரிஹேனேஷ் விதிமுறைக்கு புறம்பாக தடுத்து நிறுத்தினார். இதற்கு பெனால்டி வாய்ப்பு வழங்காததற்கு ஒடிசா அணியின் பயிற்சியாளர் 67 வயதான ஸ்டூவர்ட் பேக்ஸ்டர் (இங்கிலாந்து) போட்டி முடிந்த பிறகு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பெனால்டி வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்களுக்கு பெனால்டி வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. எங்கள் வீரர்களில் ஒருவர் யாரையாவது ஒருவரை கற்பழித்தாலோ? அல்லது எங்கள் வீரர் கற்பழிப்புக்கு ஆளானாலோ தான் பெனால்டி கிடைக்கும் போலும்’ என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.
பயிற்சியாளரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு உடனடியாக வருத்தம் தெரிவித்த ஒடிசா அணி நிர்வாகம் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பேக்ஸ்டரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 14 ஆட்டங்களில் ஆடி இருக்கும் ஒடிசா அணி ஒரு வெற்றி, 5 டிரா, 8 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.