பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தின் சிறார் உதவி காவல்துறை பிரிவு கடந்த ஒரு வாரத்தில் பிச்சை எடுத்து வந்த 26 குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 17ம் தேதி சிறார் உதவி காவல்துறை பிரிவுகள், அனைத்து மகளிர் காவல்துறை குழு மற்றும் இண்டர்நேஷ்னல் ஜஸ்டீஸ் மிஷன் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இணைந்து பிச்சை எடுத்துவந்த 15 குழந்தைகளை மீட்டனர். இதேபோல், செவ்வாய்க்கிழமை சிறார் உதவி காவல்துறை பிரிவுகள் நுங்கம்பாக்கம், பாரிஸ் கார்னர், ஆயிரம் விளக்குகள் மற்றும் போரூர் போன்ற பகுதிகளில் ஏழு குழந்தைகளை மீட்டன. மேலும் புதன்கிழமை நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
கடந்த ஒரு வாரத்தில், கொடுங்கையூர், ராஜமங்கலம், ஒட்டேரி, ஐஸ் ஹவுஸ், ஃப்ளவர் பஜார் மற்றும் திருவொற்றியூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த காணாமல் போன 6 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கெல்லிஸில் உள்ள குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு புனர்வாழ்வுக்காக குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களைத் தவிர, பல்வேறு காரணங்களால் வீடுகளை விட்டு ஓடிவந்த குழந்தைகளும் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோருடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டனர்.