சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருக்கு நெருக்கமானவர்களை விசாரிக்க ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட சித்ராவுக்கு திருமணம் நடத்து சில மாதங்களே ஆனதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் மற்றும் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் தனித்தனியாக 2 கட்டமாக விசாரணை நடத்தினார். ஹேம்நாத்தை விசாரணைகாக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.
நேற்று முன்தினம் ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார். இந்த நிலையில் சித்ராவுக்கு நெருக்கமானவர்கள், சித்ரா தற்கொலை செய்துகொண்ட விடுதியின் ஊழியர்கள், கடைசியாக சித்ராவுடன் பணியாற்றியவர்களிடம் இன்று (சனிக்கிழமை) விசாரணை செய்ய ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ முடிவு செய்து அவர்கள் ஆஜராக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.