சென்னை, அடையாறு காவல் மாவட்டத்தில் சிறார் மற்றும் இளைஞர்கள் தொழில்கல்வி மையம் மூலம் வேலை வாய்ப்பு கிடைப்பதற்குறிய வாய்ப்பு பெறும் வகையில் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் ஏற்பாடு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் உள்ள இளம் சிறார் மற்றும் முதல் குற்றவாளிகளை சீர்திருத்தும் பொருட்டும், அவர்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கும் விதத்தில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் துணைக்கமிஷனர் விக்ரமன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்பேரில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் விஷ்ணுவிடம் துணைக்கமிஷனர் விக்ரமன் நேரடியாக கலந்து ஆலோசித்தார். கிண்டி உதவிக்கமிஷனர் சுப்பராயன், இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் அது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்கினர்.
அடையாறு காவல் மாவட்டத்தில் உள்ள முதல் குற்றவாளிகள், இளஞ்சிறார்கள் பட்டியல் தயாரிக்கட்டு அவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் கடந்த 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆலோசணை மற்றும் தொழிற்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாமினை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கடந்த வாரம் துவங்கி வைத்தார்.
அதில் 4 நாட்கள் பயிற்சி வகுப்புக்கு பின்னர் நேற்று (25.09.2020) 34 முன்னாள் குற்றவாளிகள் மற்றும் முன்னாள் இளஞ்சிறார்களுக்கு பிக் பேஸ்கட் யுரேகா போன்ற தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியும் பெற ஆவண செய்யப்பட்டது. மேலும் மேற்படிப்பை தொடர விருப்பம் தெரிவித்த 6 பேருக்கு ஊக்கப்படுத்தும் விதமாக அரசிடம் இருந்து ஊக்கத்தொகை பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் கூறுகையில், ‘‘அடையாறு காவல் மாவட்டத்தில் பலர் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத நிலையிலும், கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த பலருக்கு உதவும் விதத்திலும் பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பு முடித்தோருக்கான வேலை வாய்ப்பு முகாம் நேற்று கிண்டி தொழிற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு மையத்தில் நடத்தப்பட்டது. அதில் ஆண்கள் 101 பேரும் பெண்கள் 84 பேரும் மொத்தம் 185 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் தனியார் நிறுவனங்களை அணுகி பயிற்சி மையத்திலேயே நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு தகுதியுள்ளளோர் நேரடியாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். குற்றத்தை தடுப்பதோடு குற்றம் புரிந்த நபர்களை சீர்திருத்தும் காவல் துறையினரின் முயற்சியும் மற்றும் பலர் வேலைவாய்ப்பினை இழந்துள்ள சூழ்நிலையில் அவர்கள் வாழ்வினை மீட்டுத்தரும் விதத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷனர் பாபு ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என தெரிவித்தார்.