சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்காக லைசென்ஸ் வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்புதுறை அதிகாரியை லஞ்சஒழிப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த திருவேற்காட்டைச் சேர்ந்தவர் மோகன். அதே பகுதியில் இரண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கள் தொடங்குவதற்காக மண்டல உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். திருவேற்காடு உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடம் காலியாக இருந்ததால் அம்பத்தூர் பகுதி அதிகாரி லோகநாதனிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் லைசென்ஸ் வழங்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக அதிகாரி லோகநாதன் இழுத்தடித்துள்ளார்.
அதுகுறித்து அவரிடம் கேட்ட போது அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரும்படி மோகனிடம் கேட்டுள்ளார். லஞ்சம் தர இஷ்டம் இல்லாத மோகன் அது குறித்து சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் போலீஸ் இயக்குநகரரத்தில் புகார் அளித்தார். உணவுத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ ஆதாரத்தையும் மோகன் லஞ்ச ஒழிப்புப் போலீசில் அளித்தார்.
லோகநாதனை கையும் களவுமாக பிடிக்க திட்டம் வகுத்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரசாயனம் கலந்த ரூ. 10 ஆயிரம் பணத்தை நேற்று மோகனிடம் கொடுத்தனுப்பினார். அதனை திருவேற்காட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் சமையல் கூடத்தில் வைத்து லோகநாதன் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லோகநாதனை கையும் களவுமாக கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஓட்டல்களிடம் வாங்கி வைத்திருந்த லஞ்சப்பணம் ரூ. 1 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பின்னர் லோகநாதனை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் லஞ்சஒழிப்புப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் மாவட்ட உணவுத்துறை அதிகாரி கவிக்குமார் என்பவருக்கும் இதில் தொடர்பிருப்பதால் அவரை போலீசார் கைது செய்ய சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.