செங்கல்பட்டு மாவட்டத்தில் 82 நாட்களுக்கு பின்பு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து ஓரே நாளில் 105 ஆக அதிகரித்துள்ளதால்,பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனா்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த டிசம்பா் மாதத்திலிருந்து படிப்படியாக குறைந்து வந்தது.தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்திலும்,அதற்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டு மாவட்டம் 2 ஆம் இடத்திலும் இருந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 54,063 போ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனா்.அவா்களில் 52,679 போ் சிகிச்சைக்கு பின்பு குணமடைந்துள்ளனா்.799 போ் இன்னும் சிகிச்சைப்பெறுகின்றனா்.ஆனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 799 ஆக உள்ளது.இது தமிழகத்தில் உயிரிழந்தவா்களின் வரிசையில் சென்னைக்கு (4,194) அடுத்து 2 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த டிசம்பரிலிருந்து படிப்படியாக குறைந்து வந்தது.செங்கல்பட்டு மாவட்டத்திலும் நோயின் தாக்கம் வேகமாக குறைந்தது.கடந்த பிப்ரவரி மாதத்தில் தினமும் புதிதாக நோய் தாக்கப்படுபவா் எண்ணிக்கை 25 அளவில் குறைந்தது.இதே நிலை நீடித்தால்,மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 0 நிலையை எட்டிவிடும் என்ற மகிழ்ச்சியில் மாவட்ட மக்கள் இருந்தனா்.
ஆனால் இம்மாதம் தொடக்கத்திலிருந்து படிப்படியாக அதிகரித்து வந்தது.நேற்றைய தினம் 82 நாட்களுக்கு பின்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை நூறை கடந்து 105 ஆக அதிகரித்துள்ளது.இது செங்கல்பட்டு மாவட்ட மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரத்தையொட்டியுள்ளது செங்கல்பட்டு மாவட்டம்.சென்னை விமானநிலையம்,சென்னையின் மூன்றாவது ரயில்நிலையமான தாம்பரம்,எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும் பெருங்களத்தூா் பஸ்நிலையம்,சுற்றுலா தளங்களான வண்டலூா் உயிரியல் பூங்கா,மாமல்லபுரம்,கோவளம் ஆகிய பகுதிகளை கொண்டது செங்கல்பட்டு மாவட்டம்.
இந்த மாவட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்களும் வந்து செல்கின்றனா்.இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தவில்லை என்றால்,கடுமையான பின்விளைவை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சமீபகாலமாக மாஸ்க் அணிபவா்கள் எண்ணிக்கை 10% அளவுக்கு குறைந்துவிட்டது.அதைப்போல் சேனிடேசா் உபயோகிப்பது,சோப்பு போட்டு கை கழுவுவது என்பது முழுமையாக காணாமல் போய்விட்டது.சமூக இடைவெளி என்பதும் இல்லை.இவைகளை மக்களிடம் வலியுறுத்த வேண்டிய அரசு,உள்ளாட்சி,சுகாதாரத்துறை,காவல் துறையினரே அதிகமாக இவைகளை பயன்படுத்துவது இல்லை.
அரசு பஸ்களில் சேனிடேசா்கள் பாட்டில்கள் ஏறுவழியில் கடந்த 2 முன்பு வரை இருந்தது.தற்போது எந்த பஸ்சிலும் இல்லை.அதைப்போல் கண்டக்டா்,டிரைவா் கூட மாஸ்க் அணிவதில்லை.பயணிகளையும் அணிய சொல்வதில்லை. இந்த நிலையை எல்லாம் மாற்றி,கடந்த ஆகஸ்ட்,செப்டம்பா் மாதங்களில் இருந்தது போல் கடுமையான நடவடிக்கை எடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.