சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ரூ.2.52 கோடி அபராதம் வசூல்

சென்னை,

சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ.2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், இரண்டு மீட்டர் இடைவெளியுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுதல், கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் வாயிலில் கிருமி நாசினி திரவங்கள் வைத்தல் போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களிடமிருந்து 9.4..2021 முதல் நேற்று (8–ந் தேதி) வரை மொத்தம் ரூ.2.52 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகை வசூலிப்பது என்பது அரசின் நோக்கமல்ல. பொதுமக்கள் தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!