சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை அதிக விலைக்கு விற்க முயன்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

சென்னை

சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான ஊசி மருந்தை அதிக விலைக்கு விற்க முயன்ற 2 பெண்கள் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனாவை அடுத்து கருப்பு பூஞ்சை வைரஸ் நோயால் பலர் பாதிப்படைந்து வருகின்றனர். அதற்காக விற்கப்படும் மருந்தை சமூக விரோதிகள் வாங்கி அதிக விலைக்கு விற்கின்றனர். அது தொடர்பாக போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அண்ணாசாலையைச் சேர்ந்த பாலாஜி என்பவரது உறவினர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்படைந்ததாகவும் அதற்கான ஊசி மருந்தான லிப்சோமால் ஆம்போடெரிசின் என்ற மருந்தை தனியார் ஆஸ்பத்திரிகளில் வாங்க முயன்ற போது ஸ்டாக் இல்லை என தெரிவித்தனர். அப்போது ஒரு இடைத்தரகர் லிப்சோமால் மருந்து தனக்கு தெரிந்த நபரிடம் உள்ளதாகவும், ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள அந்த ஊசி மருந்தின் விலை தற்போது ரூ. 3 லட்சம் என கூறியுள்ளார்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை ரூ. 1.50 லட்சத்துக்கு தரமுடியுமா என பாலாஜியின் உறவினர் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் சம்மதித்து பாலாஜியின் உறவினரை அந்த மருந்தை வாங்குவதற்காக சென்னை பரங்கிமலை பகுதியில் உள்ள எல்ஐசி அலுவலகம் அருகே வர சொல்லியுள்ளனர்போன்ற விவரங்கள் தெரியவந்தன.

அதனையடுத்து போலீசார் மருந்து வாங்க செல்பவர்கள் போல அங்கு சென்று கள்ளச்சந்தையில் ஊசி விற்ற ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் உம்மு குல்சும் (வயது 26), கானத்துாரைச் சேர்ந்த பவுசானா (வயது 38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த விவேக் (25), செங்கல்பட்டைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 21) ஆகிய 4 பேரும் பிடிபட்டனர். விசாரணையில் இவர்கள் ஐந்து பேரும் கூட்டாக சேர்ந்து கருப்பு பூஞ்சை நோய்க்கான ஊசி மருந்தை வாங்கி அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. ஐந்து பேரையும் அண்ணாசாலை போலீசார் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Translate »
error: Content is protected !!