சென்னையில் போலி கால் சென்டர் நடத்திய மோசடி கும்பலைச் சேர்ந்த 12 பேர் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவை, கிணத்துக்கடவுப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரிடம் குறைந்த வட்டியில் ஸ்ரீராம் பைனான்சிலிருந்து கடன் பெற்றுத் தருகிறோம் என்று கூறி பெண் மற்றும் அவரைத் தொடர்ந்து ஒரு ஆண் என அடிக்கடி எனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்தனர். அவருக்கும் தொழிலை மேம்படுத்த கடன் தேவைப்பட்டதால் அவர்களிடம் வங்கியில் ரூ. 8 லட்சம் கடன் பெற்றுத்தரும்படி செல்வராஜ் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ரூ 8 லட்சம் கடன் பெற்றுத் தரவேண்டுமென்றால் ரூ 1,39,500 முன்பணமாக செலுத்த வேண்டும் என்று ஒரு வங்கிக் கணக்கை கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் சொன்னபடி செல்வராஜ் ஐந்து தவணைகளில் அந்த பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் கடன் பெற்றுத்தராமல் மோசடி செய்துள்ளர். அவர்களது செல்போன் அணைத்து வைக்கப்பட்ட போதுதான் அவர்கள் மோசடிப் பேர்வழிகள் என தெரியவந்தது.

இது தொடர்பாக செல்வராஜ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப்பிரிவு போலீசார் கூடுதல் டெபுடி கமிஷனர் சரவணக்குமார் தலைமையில் விசாரணை நடத்தினர். செல்வராஜுக்கு வந்த கால் சென்டர் நம்பர் குறித்து ஆய்வு செய்ததில் அது அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயில் என்ற இடத்தில் இயங்கும் போலி கால்சென்டர் என்பது தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று அதிரடி ரெய்டு நடத்தி கால் சென்டரை நடத்தி வந்த சென்னை ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் (வயது 30), ஷெனாய் நகர் வளர்மதி (32), அவரது கணவர் அந்தோணி (38), புளியந்தோப்பைச் சேர்ந்த விஜயகுமார் (28), அரக்கோணம் பவுத்தரசன் (28), அம்பத்துார் அரவிந்த் (21), திருமுல்லைவாயலைச் சேர்ந்த ரிஷித் (20), கார்த்திக் (29), விஜய் (19), சாம்சுந்தர் (19), ஜியோவில்சன் (22), லோகநாதன், ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

இதில் முக்கிய முதல் குற்றவாளியான கோபிகிருஷ்ணனும், வளர்மதியும் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி இந்த கால் சென்டர் நடத்தி வந்துள்ளனர். கோபிகிருஷ்ணனும், வளர்மதியும் ஏற்கனவே இது போன்ற மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் ஜாமினில் வெளியான அவர்கள் இலங்கைக்கு தப்பி சென்றனர். பின்பு அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் ஜாமினில் வெளிவந்து திருமுல்லைவாயலில் இந்த கால்சென்டரை துவங்கி நடத்தி வந்துள்ளனர் போன்ற அதிர்ச்சித்தகவல்கள் வெளிவந்தன. 12 பேரும் விசாரணைக்குப்பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!