சென்னையில் ரெம்டெசிவர் தடுப்பூசி வழங்கப்படும் இடம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேரு விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொாரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் மருந்தாக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் தடுப்பூசி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முதல் இந்த மருந்து விநியோகம் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் இரண்டு கவுண்டர்கள் அமைத்து ரெம்டெசிவர் மிகக் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பொதுமக்களின் வசதிக்காக நேற்று முதல் ரெம்டெசிவர் மருந்து விநியோகம் சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மருந்தை வாங்கிக் கொள்ளலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘ரெம்டெசிவர் மருந்து ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள சிறப்பு விளையாட்டு ஆண்கள் விடுதியில் வழங்கப்படுகிறது. மருந்து வாங்க வருபவர்கள் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் 5வது நுழைவாயில் (லேடி பூங்கா) மூலமாக உள்ளே சென்று மருந்து வாங்கிய பின்னர் 4வது நுழைவாயில் வழியாக வெளியேற வேண்டும்.
கடந்த சில நாட்களாக சராசரியாக 300 நபர்களுக்கு மருந்து விநியோகிக்கப்பட்டது. ஆகவே, தகுந்த ஆவணங்களுடன் முதலில் வரும் நபர்களுக்கு மருந்து வழங்கப்படும். மருந்து கிடைக்காதவர்கள் அடுத்த நாள் வரிசையில் முன்னதாக வந்து பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, பொறுமை காத்து மருந்தை பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம். தயவு செய்து, இடைத்தரகர்கள் எவரையும் அணுக வேண்டாம். ரெம்டெசிவர் மருந்தை தவறாக பயன்படுத்தினாலோ அல்லது மோசடி செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.