சென்னை நகர் முழுவதும் ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
243 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்து கொரோனா நோயாளிகளுக்கு அவற்றை வழங்கினர். கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்துகளை வியாபார நோக்கத்திற்காகவும், அதிக பணம் லாபம் பெறுவதற்காகவும் விற்பனை செய்பவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்கின்றனர்.
போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை நகர கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் மேற்பார்வையில் துணைக்கமிஷனர்கள் மேற்பார்வையிலான தனிப்படையினர் சட்ட விரோதமாக பதுக்கி வைத்தவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி இதுவரை தனிப்படையினர் தேடுதலில் ரெம்டெசிவர் மருந்தை விற்பனை செய்த 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘மயிலாப்பூர் துணைக்கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டத்தில் 2 வழக்குகளும், கீழ்பாக்கம் மாவட்டத்தில் 3 வழக்குகளும், திருவல்லிக்கேணி மாவட்டத்தில் 1 வழக்கும், அடையாறு காவல் மாவட்டத்தில் 1 வழக்கும், புனித தோமையர்மலை மாவட்டத்தில் 3 வழக்குகளும், மாதவரம் காவல் மாவட்டத்தில் 1 வழக்கு என மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட 24 நபர்களிடமிருந்து 243 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை கைப்பற்றப்பட்ட ரெம்டெசிவர் மருந்து பாட்டில்களில் 78 மருந்து பாட்டில்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 165 மருந்து பாட்டில்கள் மற்ற நோயாளிகள் பயன்பாட்டுக்கு பெற்று வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்துகளை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பவர்கள் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.